Summary: Other parts of Tamil Nadu including Cauvery Delta, the cultivation of rice is shrinking due to changes in rainfall pattern and water supply for irrigation. So, Some of the farmers in Tamil Nadu are started cultivating the traditional varieties of rice which is drought-resistant and pest-resistant. These farmers wants the Government support for the cultivation of traditional varieties of rice.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்போம்…
வறட்சியிலும் கதிர் தள்ளும்…
பேரழிவை எதிர்கொள்ளும்…
வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போதும் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் கண்ணுக்குத் தெரியாமல் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நெல் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாரம்பரிய நெல் ரகங்களை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள்.
——
தமிழ்நாட்டில் காவிரியில் போதிய தண்ணீர் வரவில்லை. மழை பொய்த்துவிட்டது. அதனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2011-12-ல் ஜூன் முதல் மார்ச் வரையிலான காலத்தில் 23.1 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் அந்த அளவு 5.57 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. ஏற்கெனவே, பிற மாநிலங்களிலிருந்து அரிசி வரத்தை எதிர்பார்த்து வந்த தமிழகம், இந்த ஆண்டில் மேலும் கடும் நெருக்கடியைச் சந்திக்க உள்ளது. இதனால், அரிசி விலை மேலும் உயரலாம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, எதிர்காலத்தில் பருவமழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படுதல், காலம் தவறி மழை பெய்தல் போன்றவற்கான வாய்ப்புகள் இருப்பதையும், அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் நெல் விளையும் நிலங்களில் வேறு மாற்று பயிர்களை பயிரிட வேண்டிய சூழ்நிலைக்கு சூழ்நிலைக்கு ஆளாக வேண்டியதிருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் நமது சாகுபடி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கடும் வறட்சியைத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் பல, காலப்போக்கில் அழிந்து விட்டன. இருக்கின்ற ரகஙகளையாவது காப்பாற்றி, விவசாயிகளுக்குக் கொண்டு சேர்த்தாலேயே நல்ல பலன்கள் கிடைக்கும். மழை பெய்யவில்லை. அதனால் நெல் பயிர் கருகி விட்டது என்ற நிலைமைகளை சமாளித்து விடலாம் என்கிறார்கள் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.
களர்பாலை. இது நமது பாரம்பரிய நெல் ரகம். காரத்தன்மை வாய்ந்த களர் நிலத்திலும் வளரக் கூடியது. நாற்றாக்கி நட வேண்டியதில்லை. மழை பெய்கிறபோது விதைத்து விட்டால் போதும். இந்த நெல் பயிருக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இதற்கு உரம் போட வேண்டியதில்லை, களை எடுப்பதற்காகவும் அதிகம் செலவிட வேண்டியதில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. பக்கத்து வயலில் வேறு ரக நெல்லில் பூச்சி வந்திருந்தாலும், இந்த நெல்லை எந்தப் பூச்சியும் தாக்குவதில்லை. 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் கூட போதும். வறட்சியிலும் இந்த நெல் விளைந்து விடும். காரத்தன்மை வாய்ந்த களர் நிலத்திலும் பயிராகக் கூடிய இந்த ரக நெல், தற்போது திருவண்ணாமலையை அடுத்துள்ள நாகப்பாடி கிராமப் பகுதியில் சில விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.
“இது 90 நாள் பயிர். ஆடி, ஆவணி, புரட்டாசியில் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து பதினைந்து மூட்டை நெல் கிடைக்கும். நாங்க எங்க உபயோகத்துக்கு வைச்சுக்கிட்டு, மீதத்தை வேறு யாருக்காகவது விற்று விடுகிறோம். எங்க நிலத்திலே குண்டு, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களைப் போடலாம். ஆனால், மழை இல்லாவிட்டால் ஒன்றும் கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் சிரமப்படுவதைவிட, ஏதாவது நிச்சயம் கிடைககும் என்பதால் களர்பாலையை பயிரிடுகிறோம்” எனகிறார் நாகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.
. “எனக்கு 9 ஏக்கர் நிலம் இருக்கிறது. நானும் இந்த களர்பாலை நெல்லை பயிரிட்டு வருகிறேன். ஒரு மூட்டை நெல் இந்த வருஷம் ஆயிரம் ரூபாய்க்கு போகிறது. சீரக சம்பா விதைச்சால் ஒரு மூட்டை இரண்டாயிரத்துக்குப்போகும். களர்பாலை நெல்லை அறுவடை செய்ய வருகிறவரகள்கூட, கூலியாக வேறு நெல்லை கேட்கிறார்கள். அப்புறம் எதற்கு இதனைப் போட வேண்டும்? ஒரு ஏக்கருக்கும் குறைவான இடத்தில் இந்த நெலலை பயிர் செய்து வருகிறேன். மற்ற நிலத்தில் வேறு பயிர்கள் சாகுபடி செய்கிறேன்” என்கிறார் காரப்பட்டு கிராமததைச் சேர்ந்த பி. சுப்பிரமணி. இதேபோல சுமார் இருபது, இருபத்தைந்து விவசாயிகள் களர்பாலையை பயிரிட்டு வருகிறார்கள். ஆனாலும்கூட, வறட்சியைத் தாங்கும் இந்த நெல்லை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தப் பகுதியில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. வேறு எந்த நெல்லும் விளையாத இடங்களில் களர்பாலை மட்டுமே சாகுபடி நன்றாக வருகிறது என்பதால் இந்த நெல் இந்த அளவுக்காவது பயன்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
“திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய மொட்டக்கூர் நெல் 7 அடி உயரம் வளரக்கூடியது. இதற்கு உரம், பூச்சி மருந்து எதுவும் தேவையிலலை. விதைத்து விட்டால் போதும். 5 மாதத்தில் 15 மூட்டை நெல் எடுத்து விடலாம. இதேபோல, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வாடன் சம்பா நெல். வறட்சியில் அருகம்புல் காய்ந்து போனாலும் இந்த நெல் காய்ந்து போகாது. 5 மாத காலம் ஆகும் இந்தப் பயிருக்கும் தண்ணீரும் தேவையில்லை. உரமும் தேவையில்லை. புழுதி விதைப்புதான். இந்த குறிப்பிட்ட இரண்டு ரகங்களும் தற்போது இல்லை. இதுபோல வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் அருகி வருகின்றன. இதேபோல, களர்பாலையும் சில ஆண்டுகளில் காணாமல போய் விடலாம்” என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.டி. ராஜேந்திரன்.
“பாசுமதி அரிசி பாரம்பரிய ரகத்தைச் சேர்ந்தது. அதை எப்படி பிரபலப்படுத்தி விற்று லாபம் பார்க்கிறார்கள். அதேபோல தரம் வாய்ந்த நமது சீரகச் சம்பாவையும் பிரபலப்படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். சிறிய மாநிலமான நாகலாந்தில் 857 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். ஒடிசா மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட அங்குள்ள அரசு மானியம் வழங்குகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக தமிழக விவசாயிகளுக்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டும். மானாவரி நிலங்களில் பாரம்பரிய நெல் விளையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.
“சுனாமியில் கடல்நீர் புகுந்து பாதிக்கப்பட்ட நிலங்களில் இந்த களர்பாலை நெல் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். காரத்தன்மை கொணட நிலங்களில் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது களர்பாலை. எனவே, களர்நிலங்கள், காரத்தன்மை கொண்ட நிலங்களில் இந்த நெல்லைப் பயிரிடலாம். வேதாரண்யம் பகுதியில் சில கிராமங்களில் பயிரிட்டு நல்ல பலன் கிடைத்திருக்கிறது” என்கிறார் இந்திய பாரம்பரிய அறிவியல் மைய (சிஐகேஎஸ்) அமைப்பைச் சேர்ந்த சுபாஷிணி ஸ்ரீதர். களர் நிலங்களில் சாகுபடி செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய திருச்சி-1, திருச்சி-2 ரக புதிய ரக நெல்கள் உரிய அளவில் பயன்தரவில்லை என்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் உரமோ பூச்சி மருந்தோ தேவைப்படாத பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தலாமே? என்பதுதான் பலரது கேள்வி.
“வறட்சியைத் தாக்குபிடித்து விளையக்கூடிய சம்பாமோசனம், தற்போது இல்லை. சிவப்பு குருவிக்கார், சூரன் குறுவை போன்ற வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய ரகங்கள் வேதாரண்யம் வட்டத்தில் பெரிய குத்தகை பகுதியில் பயிரிடப்படுகிறது. குழியடிச்சான் என்ற மற்றொரு ரகம், வேதாரண்யம் பகுதியிலும் ராமநாதபுரம் பகுதியிலும் தற்போது பயிரிடப்படுகிறது. இதேபோல, குடைவாழை என்ற நெல் ரகம் வறட்சியிலும் நன்கு விளைந்து விடும். உரம் வேண்டாம்., பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவைப்படாது. இருந்தாலும், பாரம்பரிய நெல் ரகங்களில் மகசூல் குறைவு. அத்துடன் விற்பனையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அரசின் கொள்முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள நெல் ரகங்களை மட்டுமே அரசு கொள்முதல் செய்யும். அந்தப் பட்டியலில் பாரம்பரிய நெல் ரகங்கள் இல்லாததால், அரசு கொள்முதலுக்கு இந்த நெல் ரகங்களைக் கொடுக்க முடியாத நிலை உள்ளது“ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சுபாஷிணி.
“கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய நெற் பயிர்களுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படாது. வறட்சியிலும் மகசூல் கொடுக்கக் கூடியது. ரசாயன உரமோ பூச்சி மருந்தும் தேவையில்லை. 150, 160 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ மூட்டை 24 கிடைத்து விடும். காட்டுயாணம் என்ற ஒரு வகை நெல் 180 நாளில் வளரும். ஐந்து, ஆறடி உயரம் வரை வளரும். நேரடியாக விதைத்து விடலாம. தண்ணீர் அவ்வளவு தேவைப்படாது. வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியத்தில் விவசாயிகள் இந்த நெல்லைப் பயிரிடுகிறார்கள்.புளிவெடிச்சான், பனங்காட்டுக் குடவாலை, பூம்பாளை போன்ற பாரம்பரிய ரகங்களும் இருக்கின்றன. இலுப்பைப் பூ சம்பா, விதைத்தால் போதும். 130 நாளில் அறுத்து விடலாம். உவர் நிலத்தில் வளரக் கூடியது கைவரகு சம்பா. வறட்சியான சிவகங்கை மாவட்டத்தில் கவுனி நெல்லும் ராமநாதபுரத்தில் வரப்புக் குடைஞ்சான் நெல்லும் பயிரிடப்படுகிறது. நாகர்கோவில் பகுதியில் அறுபதாம் குறுவை என்ற நெல் 60 நாளில் விளைந்து விடும். இதைப் பயிரிடுவதற்கு என்று சீசன் கிடையாது. எந்தக் காலத்திலும் பயிரிடலாம். சாதாரண அளவு தண்ணீர் இருந்தால் போதும். இதனால், பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் இந்த குறுகிய கால நெற் பயிரை பயிரிட தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்” .என்கிறார் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கும் கிரியேட் என்ற அமைப்பை நடத்தி வரும் விவசாயி ஜெயராமன்.
“வறட்சிக்கு மட்டுமலல மழை, வெள்ளத்துக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கின்றன” என்று கூறும் ஜெயராமன், “குளம், குட்டைகள் போல தண்ணீர் நிற்கும் இடங்களில் பயிர் செய்வதற்கு ஏற்ற நெல் கார். அந்த நெல்லை நட்டு அது வேர் பிடித்து விட்டால் போதும். அப்புறம் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்காக, பயிர் சாய்ந்து விடாது. தண்ணீரில் இருக்கும்போதே இந்த நெல்லை அறுவடை செய்து விடலாம். ஈரமாக இருந்தாலும் வீட்டில் வைத்திருக்கும் போது உடனே முளைவிட்டு விடாது. இதேபோல தண்ணீரில் இருந்தாலும் சாயாத பயிர் நலுமுடுங்கி நெல் ரகம்” என்று விளக்குகிறார்.
“இந்த நெல் நகரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வருகிறோம். இரண்டு கிலோ விதை நெல் கொடுத்தால் அவர்கள் அதை பயிர் செய்து, நான்கு கிலோ இந்த பாரம்பரிய நெல்லை பயிர் செய்யும் விவசாயிகள் நேரடியாக அங்காடிகளில் விற்பதற்கும் உதவி வருகிறோம். நெல்லை மதிப்புக் கூட்டி பொருள்களாக்கி விற்றால் விவசாயிகளுக்கு மேலும் நல்ல லாபம் கிடைக்கும்” என்கிறார் ஜெயராமன். “இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களை விற்றுத்தர புளியங்குடி விவசாயிகள் சேவா நிலையம் உதவி வருகிறது. அரிசியாக்கித் தர வேண்டும். அப்போதுதான் நல்ல விலை கிடைக்கும்” என்கிறார் திருநெல்வேலியில் உள்ள இயற்கை விவசாய ஆர்வலர் வைகை குமாரசாமி.
வறட்சியை எதிர்கொள்ளவும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக் கூடியதாகவும் இருக்கக் கூடிய பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் காக்க வேண்டுமானால், அந்த விதைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தேவை..அதனை பயிரிடும் விவசாயிகள் அந்த விளைபொருள்களை விற்பதற்கான வழிமுறைகளும் தேவை. ஏற்கெனவே பாரம்பரியமாக இருந்த பல நெல் வகைகள் காணாமல் போய்விட்டன. இந்தச் சூழ்நிலையில், பாரம்பரிய நெல்லை பாரம்பரிய நெல்லை பரவலாக்கி அதனைப் பாதுகாக்க அரசு திட்டமிட்டு செயல்படாவிட்டால் மற்ற பாரம்பரிய ரக நெல் வகைகளையும் காலப் போக்கில் இழந்து விடுவோம். வரும்முன் காக்க வேண்டியதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது.
Puthiyathalaimurai (09-05-2013)