அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 3: சூழலுக்கு இசைவானது எது?

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விஞ்ஞானிகளில் முக்கியமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹான்ஸன். காலநிலை மாற்றம் தொடர்பான அவரது களப்பணிக்காக பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரோடு, காலநிலை மாற்றம் சார்ந்த மேலும் மூன்று நிபுணர்களும் சேர்ந்து, அணுசக்தி வேண்டாம் என்று சொல்லும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்க அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கடிதத்தின் சாராம்சம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் களப்பணியாளருமான ஜார்ஜ் மானிபாட் தீவிர அணுசக்தி எதிர்ப்பாளராக இருந்தவர். இப்போது அவர் அணுசக்தியை ஆதரிக்கிறார். காரணம்: காலநிலை மாற்றம். “ஆபத்து இல்லாத மாற்றுகள் இருக்குமானால் அணுசக்தியை முற்றிலும் ஒழித்துவிடலாம். ஆனால் முழுமையான தீர்வு என்ற ஒன்று இல்லை” என்கிறார் அவர்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை அணுசக்தி குறைக்க உதவும் என்று இவர்கள் எப்படிச் சொல்கிறார்கள்? பிற எரிசக்திகளோடு ஒப்பிடும்போது அணுசக்தி, காற்று சக்தி மற்றும் சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் போது நிகழும் பசுமையில்ல வாயுக்களின் வெளியேற்றம் மிகவும் குறைவு என்றுச் சொல்லப்படுகிறது.

மரபு சார்ந்த எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படும் பிற தொழில்நுட்பங்களால் (உதாரணம்: நிலக்கரி) உருவாகும் பசுமையில்ல வாயுகளின் வெளியீடு மிக அதிகமெனவும், அதனால் காலநிலை மாற்றம் வேகமடைவதாகவும் விஞ்ஞானிகளும் அணுசக்திக்கு ஆதரவான சூழலியலாளர்களும் சொல்கிறார்கள். காற்று, சூரியசக்தி போன்ற மாற்று எரிசக்திகளிலும் இந்த பசுமையில்ல வாயுக்கள் வெளியீடு பிரச்சினை இல்லை. ஆனால், நிரந்தரமான எரிசக்தி உற்பத்திக்கு காற்றையும், சூரியசக்தியையும் நம்பியிருக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) தன்னுடைய அறிக்கை ஒன்றில் 2030க்குள் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்று சொல்கிறது. பசுமையில்ல வாயுக்களின் வெளியிட்டை 2050-க்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை மாற்றவில்லையென்றால் காலநிலை மாற்றத்தால் கடுமையான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கழகம் சொல்கிறது. புகுஷிமா விபத்திற்கு பிறகான அறிக்கை ஒன்றிலும் இதே கருத்தை வலியுறுத்துகிறது சர்வதேச அணுசக்தி கழகம்.

விபத்திற்கு பிறகான ஆண்டு அறிக்கையில் “சர்வதேச எரிசக்தி தேவைகளை சந்திக்கும் அதேவேளையில், எதிர்காலத்தில் பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்துவதிலும் அணுசக்திக்கு முக்கிய பங்கு உண்டு. அணு உலைகளின் செயல்பாட்டின்போது எந்தவிதமான பசுமையில்ல வாயுக்களின் வெளியீடும் நிகழ்வதில்லை. ஆயுள் வட்டத்தில் அது வெளியிடும் பசுமையில்ல வாயுக்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறது. அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் எனவும் அது சொல்லியிருக்கிறது.

மொத்தத்தில் அணுசக்தி சூழலுக்கு இசைவான ஒன்று என்று ஒரு தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இப்படி காலநிலை மாற்றத்துக்கான பதிலாக அணுசக்தியை முன்னிறுத்தும் குரல்கள் அவற்றின் பிற அபாயங்களை பார்ப்பதில்லை என்று சொல்கிறார்கள் மற்றொரு தரப்பினர். அணுசக்தி ஆதரவாளர்கள் முன்னிறுத்துவது போல அது சூழலுக்கு இசைவான ஒன்று இல்லை என்கிறார்கள் அவர்கள்.

ஹான்சன், மானிபாட் போல அணுசக்திக்கு எதிரான தரப்பினரும் வலிமையானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களது வாதம் என்ன?

அணுசக்தியை மாற்றாக முன்னிறுத்தும் சர்வதேச அணுசக்தி கழகம் எரிசக்தி செயல்திறன் பற்றி என்ன சொல்கிறது?

விரிவாகப் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/article5392991.ece?homepage=true

 

Leave a Reply