அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 4: யுரேனியத்துக்கு எதிர்ப்பு

Why are environmentalists and activists up against Uranium? what are the dangers of Uranium as a fuel and in mining?
Read on..
அமெரிக்காவின் தலைசிறந்த சுற்றுசூழல் ஆர்வலர்களில் ஒருவர் பாரி காமனர் (Barry Commoner). அரசியலிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இடதுசாரி சிந்தனை ஓட்டம் கொண்ட காமனர் அணுசக்திக்கு எதிராக சொன்ன ஒரு கருத்துதான் தொடர்ந்து அதன் எதிர்ப்பாளர்களால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. “அணுசக்தி என்பது தண்ணீரை கொதிக்க வைக்க மிகவும் சிக்கலான வழி” என்றார் அவர்.

அணுசக்திக்கு ஆதரவானவர்கள் போலவே எதிரானவர்களும் வலிமையான வாதங்களை முன் வைக்கிறார்கள். அணுசக்தி ஆதரவாளர்கள் சொல்வது போல அது தூய்மையான, பசுமையான சக்தி அல்ல என்பதை பல வருடங்களாகவே அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். அதனாலேயே ‘தூய்மை வளர்ச்சி’ முறையில் அணுசக்தியை சேர்க்கக் கூடாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே பசுமையில்ல வாயுக்களை வெளிப்படுத்தும் அணுசக்தி எப்படி தூய்மையில்லாத சக்தி என்று இவர்கள் சொல்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன?

அணுசக்தியைப் பொருத்தவரையில் மின்சார உற்பத்தியின்போது மட்டுமே பசுமையில்ல வாயுக்களின் வெளியீடு இருக்காது. ஆனால் அணுசக்தியின் முழுமையான ஆயுள் வட்டம் அத்தனை தூய்மையானதும் அல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்கிறார்கள் அணுசக்தி எதிர்பாளர்கள்.

அணுசக்தியின் முழுமையான ஆயுள் சுழற்சியில் பல கட்டங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதல்கட்டமாக அணுசக்தி உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படும் யுரேனியத்தை பூமியிலிருந்து பிரித்தெடுக்கும் மைனிங் (Mining) எனப்படும் சுரங்கவியல் நடைமுறை. (யுரேனியம் தவிர தோரியம் மற்றும் புளுடோனியமும் எரிபொருட்ளாக பயன்படுத்தப்படுகின்றன). இந்த மைனிங்கிலேயே பல பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்கள் அணுசக்தி எதிர்ப்பாளர்கள். பூமியிலிருந்து யுரேனியத்தை பிரித்தெடுக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.

ஆனால் யுரேனியச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டு. சுரங்கப்பணியின்போது வெளிப்படும் ரேடன் எனப்படும் நச்சு வாயு சுவாசப்பையில் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தவிர சுரங்கப்பணியின்போது மிக அதிக அளவில் அசுத்தமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்றும், இது சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். சுரங்கப்பணியின்போதே கதிர்வீச்சு தூசு வெளியிடப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இதனால் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமன்றி சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கும் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றன.

இந்தப் பின்னணியில், 1970களில் யுரேனியம் சுரங்கப்பணி என்பதே மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாக உருவானது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இது மிகவும் வலிமையாக இருந்தது. 1976ல் யுரேனியம் சுரங்கப்பணிக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டு பல ஆர்ப்பாட்டங்கள் அங்கு நிகழ்ந்தன. 1992ல் யுரேனியம் சுரங்கத்தோண்டல் குறித்த கருத்து கேட்புக் கூட்டமும் நடந்திருக்கிறது.

பல நாடுகளிலிருந்து பூர்வக்குடியினர் கலந்து கொண்ட இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அவர்கள் வெளியிட்ட குறிப்பில், யுரேனியம் சுரங்கப்பணி, கழிவு சேகரித்து வைத்தல் மற்றும் அணுசக்தி சோதனை மூலம் இனி அவர்களது நிலங்களையோ மக்களையோ சுரண்டக் கூடாது என்பதும், அவர்களுடைய நிலங்களை சுத்தப்படுத்தி மீட்டுத்தர வேண்டும் என்பதுமே அவர்களது முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

இன்று சுரங்கப்பணி பல வித பாதுகாப்பு அம்சங்களுடன் நடப்பதாக அணுசக்தி அமைப்புகள் சொன்னாலும், தொடர்ந்து பல இடங்களில் யுரேனியத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கிறது. புகுஷிமா விபத்திற்கு பிறகு யுரேனியத்தின் விலை கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மில்லிங் எனப்படும் ஆலையிடுதலில் என்னனென்ன பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்?

தொடர்ந்து பார்ப்போம்.

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5447612.ece?homepage=true

Leave a Reply