Threats to Mangrove eco system in Pichavaram

Summary: The mangroves are the coastal bio shields to protect the coastline from natural calamities. During tsunami, Tamil Nadu witnessed several years ago, few villages in Pichavaram area were escaped from the disaster, thanks to Mangrove eco system. But, there is a continuous threat to the mangrove wetlands in Pichavaram area and some measures are going on to restore the mangroves.

ஆழிப் பேரலைக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள்!

“தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு. அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது அழிபட்டுக் கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள்,கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள் போல, அந்தச் செடிகளில் இருந்து கிளம்பிய கொடிகள், தண்ணீரைத் தொடுகின்றன; உள்ளேயும் செல்கின்றன. இடையிடையே திட்டுகள் உள்ளன. அவை மேய்ச்சல் இடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்களில் விரிந்து பரந்து உள்ளன. சில இடங்களிலோ, தோணி நுழைகின்ற அளவு மட்டுமே நீர்ப்பரப்பு உள்ளது. அங்கே, விழுதுகளும், கொடிகளும் வழிமறித்து நிற்கின்றன. வளைத்தும், பிரித்தும், நீக்கியும் வழி காண வேண்டி இருக்கிறது. செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப்பறவைகளும், ஆங்காங்கு தங்கி உள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்தில் இருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடியே அழகாக இருக்கின்றது. வெளிர் நீலவண்ண நீர், சூழப் பச்சை, மேலே நீலமும், வெண்மையும் கொண்ட மேகக்கூட்டம், இடையில் வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை அணிவகுத்துச் செல்வதைப் போல!…” இப்படி எழுதினார் திராவிட நாடு இதழில் (3.7.1960) அண்ணா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது இல்லை. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் அலையாத்திக் காடுகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன.

“ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படும் காலங்களில் அலையாத்திக் காடுகள் தடுப்பு அரண் போல திகழ்கின்றன. தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது பிசசாவரம் பகுதியில் அலையாத்திக் காடுகள் இல்லாத மூழ்குதுறையில் 82 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. 20 பேர் இறந்து போனார்கள.ஆனால், அலையாத்திக் காடுகள் இருந்த டி.எஸ். பேட்டை என்ற ஊரில் ஒரு வீடு கூட பாதிப்புக்கு ஆளாகவில்லை. அந்த ஊரில் சுனாமியில் இறந்து போனவர்கள் யாரும் இல்லை” என்று அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை விளக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி ஃபவுண்டேஷனின் கடலோர ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் வி.செல்வம்.

“கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர்நீரில் வளரும் மரங்களும் காடுகளும் மாங்க்ரூவ் எனப்படும் அலையாத்திக் காடுகள். இந்தக் காடுகள், அலைகளைத் தடுத்து திரும்பி அனுப்புவதால் இதற்கு அலையாத்திக் காடுகள் என்று பெயர். கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்திக் காடுகள் இயற்கை அரண் போல இருக்கின்றன.இந்த கடல் நீர் மட்டம் உயருவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் அலையாத்திக் காடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர உயர, அலையாத்திக் காடுகள் உள்ள சதுப்பு நில உயரமும் அதற்கேற்ப அதிகரிக்கும். இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும் அதன பாதிப்புகள் அவ்வளவாக இருக்காது. ஆற்றிலிருந்து கடலுக்கு வரும வண்டல் மண் சதுப்பு நிலத்திற்கு வந்து விடும். அலையாத்திக் காடுகளிலிருந்து உதிரிந்து விழும் இலைகள் மக்கி உயரம் உயர்ந்து வரும். அதாவது கடல் நீர் மட்டத்துக்கு ஏற்ப அலையாத்திக் காடுகள் இருக்கும். ஆண்டுக்கு இரண்டு மில்லி மீட்டரிலிருந்து 5 மில்லி மீட்டர் வரை கடல் நீர் மட்டம் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவுக்கு இந்த சதுப்பு நிலங்களில் ஒரு மில்லி மீட்டரிலிருந்து ஐந்து மில்லி மீட்டர் வரை நிலமும் உயரும். எனவேதான் கடல் நீர் மட்டம் உயருவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் அலையாத்திக் காடுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது” என்கிறார் அவர்

“இந்த அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்களுக்கு தனித்துவமான அம்சங்கள் இருக்கின்றன. வேர்கள் மூலம் உப்பு நீரிலிருந்து நல்ல தண்ணீரை எதிர் சவ்வூடு பரவல் மூலம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. சில தாவரங்கள் உப்பு நீரை ஈர்த்து எடுத்துக் கொண்டாலும்கூட, தேவையான உப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை வெளியேற்றி விடுகிறது.உப்புத் தண்ணீரில் வளும் தாவரங்களின் ஜெனிட்டிக் ரிசோர்சஸ் முக்கியத்துவம் வாய்ந்தவை. அலையாத்திக் காடுகள் இறால் மீன்கள், நண்டுகள் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. இறாலும் நண்டுகளும் ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்தால்கூட, அதன்குஞ்சுகள் இடம் பெயர்ந்து அலையாத்திக் காடுகளில் அடைக்கலமாகின்றன. அங்குள்ள இலைகள் அவற்றுக்கு உணவாகவும் இருக்கின்றன. அலையாத்திக் காடுகள் சூழ்நிலை இல்லாவிட்டால் அந்தக் குஞ்சுகள் சரிவர வளருவதில்லை. அலையாத்திக் காடுகளை உருவாக்கினாலோ அல்லது மறுமீட்பு செய்தாலோ ஓராண்டுக்கு 13 ஆயிரம் டாலர்கள் அளவுக்கு மீன்களும் இறால்களும் கிடைக்கும் என்பது அறிவியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அழிந்து போன இடஙகளில் அலையாத்திக் காடுகளை மீண்டும் உருவாக்குதல், புதிய இடங்களில் அலையாத்திக் காடுகளை புதிதாக ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல். அதாவது கடலோரங்களில் உள்ள மீன் பண்ணைகள், இறால் குட்டைகள் உள்ள பகுதிகளில் அலையாத்திக் காடுகளை ஏற்படுத்த வேண்டும். அண்மைக் காலங்களில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு சற்று அதிகரித்துள்ளதால் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களால் அவை பாதிப்புக்கு ஆளாகலாம். எனவே, இருக்கின்ற அலையாத்திக் காடுகளை தொடர்ந்து பாதுகாத்து வர நடவடிக்கைக்கள் அவசியம். இதில் மக்களையும் ஈடுபடுத்த வேண்டும்” என்கிறார் செல்வம்.

Puthiyathalaimurai (2-05-2013)