Climate change impact on coral reefs in Gulf of Mannar

Summary: Coral reefs are rain forests of the sea and source of livelihood for million of people. During Tsunami, coral colonies safeguarded the coastal areas in Gulf of Mannar (from Rameswaram to Tuticorin). Coral reefs are a very sensitive to even slight increase of temperature. Due to elevated water temperature, the corals got bleached. the prolongation of temperature rise would lead to mortality of corals that would be a loss loss in terms of ecological, biological and economical point of view. Gulf of Mannar witnessed coral bleaching in 1998 and 2002. Since 2005, bleaching become an annual phenomenon especially in summer months and impacts varied in different levels. It is well known that climate change will affect reefs negatively through both increased temperatures and acidification Two small islands in this region submerged. The Sea level rise is also have an impact on coral colonies, according to the researchers. The cultivation of the seaweed, Kappaphycus alvarezii, is also affects the coral colonies in this region.

கடலுக்குள் மழைக் காடுகள்

சுனாமி வந்த போது ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் 21 தீவுகளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பவளப் பாறைகள். அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் மீன் குஞ்சுகள் பொறிப்பதற்கான வாழ்விடமாக இருக்கும் பவளப் பாறைகள், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக அழிந்து வருகின்றன. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

——
ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கு மன்னார் வளைகுடாவும் விலக்கு இல்லை. “பருவநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மீன்பிடி தொழில் முறைகள் காரணமாக 2030-ம் ஆண்டில் உலகில் உள்ள பவளப் பாறைகளில் பாதி அளவு பவளப் பாறைகள் பிளீச்சிங் எனப்படும் வெளுப்பாகி பாதிப்புக்கு ஆளாகும்” என்று வோல்டு ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் எச்சரித்துள்ளது.

பவளப் பாறைகள் (coral reefs) என்றதும் ஏதோ ஒரு வகை பாறையோ அல்லது தாவரமோ என்று கருதிவிட வேண்டாம். குழிமெல்லுடலிகள் (Coral polyps) என்ற வகையைச் சேர்ந்த இந்த உயிரினங்கள், கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும். இதன் இளம் பருவத்தில பிளானுலா எனப்படும் கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து வளர்ந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்த பிறகு, கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் பாலிப் இருக்கும். வாய் வழியாக உண்டு வாய் வழியாக கழிவை வெளியேற்றும் தன்மை கொண்ட, பாலிப், கடலில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை உள்ள பகுதியை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. எனவே, இந்த உயிரினங்கள் வாழும் பகுதியை மாநில அரசு 1986-ல் கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவித்து, 1989-ல் இதனை உயிர் கோள பகுதியாக (Biosphere Reserve) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை யுனெஸ்கோவும் அங்கீரித்துள்ளது.

“பவளப்பாறைகள் கடலில் உள்ள மழைக்காடுகள் போன்றவை. வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பவளப்பாறைகளை எளிதாகப் பாதித்து விடும். கடலின் நீரின் வெப்பநிலை அதிகரித்தால் பவளப்பாறைகள் வெளுப்பாகிவிடும். வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் பாசிகளின் வளர்ச்சி குறையும். அல்லது அந்த கடல் பாசிகள் அழிந்து விடும். இதனால், வெப்பநிலை அதிகரிப்பு நீடித்தால் பவளப்பாறைகள் இறந்து விடும். சூழல், உயிரியல், பொருளாதார நலன்களுக்கு இது பெரிய இழப்புதான்” என்கிறார் தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் மெரைன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் ஜே. பேட்டர்சன் எட்வர்டு. இந்தப் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் குறித்து தொடர்ந்து இந்த அமைப்பு சார்பில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார் அவர்.

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த நூற்றாண்டில் வெப்பநிலையில் 0.1 முதல் 0.90 டிகிரி செல்சியஸ் வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை 0.56 முதல் 2.26 செல்சியஸ் வரை மாற்றம் உள்ளது. உலக அளவில் ஏற்பட்டுளள வெப்பநிலை அளவை வைத்துப் பார்த்தால், மன்னார் வளைகுடா பகுதியில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதை ராமேஸ்வரம் பாம்பனில் நாஸா எடுத்து காட்டியுள்ள புள்ளி விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸ்டைன் அளவு அதிகப்பதால், அந்த வாயு கடல் நீரில் கரையும். அளவும் அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர் மேலும்
அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதனால் பவளப் பாறைகள் பாதிக்கப்படுகின்றன. கடலின் வெப்பநிலை அதிகரிப்பும் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதாவது, வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பவளப் பாறைகளை ஒட்டி அதற்கு உணவாக இருக்கும் கடலில் உள்ள தாவர நுண்ணுயிர் (zooxanthellae) அங்கிருந்து வெளியேறி விடும். அதனால், பவளப் பாறைகள் பீளிச்சிங் எனப்படும் வெளுப்புக்கு ஆளாகின்றன.

“இருக்கின்ற வெப்பநிலையில் ஒரு டிகிரி அளவுக்கு அதிகரித்தாலும்கூட பவளப்பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின்றன. பெரும்பாலும் கோடை காலங்களில் வெப்பநிலை 31 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் போது பவளப்பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின்றன. மன்னார் வளைகுடாவில் 1998, 2002ம் ஆண்டுகளில் பவளப் பாறைகள் வெளுப்புக்கு ஆளாகின. 2005-ம் ஆண்டிலிருந்து கோடை காலத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் வெளுப்புக்கு ஆளாவது வாடிக்கையாகி விட்டது. 2007-ம் ஆண்டில் மண்டபம் பகுதிகளில் குறைவாகவும் கீழக்கரை, தூத்துக்குடி பகுதிகளில் அதிகமாகவும் பிளீச்சிங் இருந்தது. வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகள் வெப்பநிலை குறைந்ததால், அது அடுத்த இரண்டு மாதங்களில் அது புத்துயிர் பெற்று விடும். சில நேரங்களில், வெளுப்புக்கு ஆளாகும் பவளப்பாறைகளின் உயிர்பை மீட்க முடியாமலும் போய் விடலாம்” என்கிறார் பேட்டர்சன்.

“கடலின் நீர் மட்டம் அதிகரித்து வருவது குறித்து ஐபிசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீர் மட்ட உயர்வினால் தண்ணீரின் ஆழம் அதிகரிக்கும். அதனால், பவளப் பாறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சூரிய வெளிச்சம் குறையும். அதனால் பவளப் பாறைகளின் வளர்ச்சியும் குறையும். பவளப்பாறைகள் குறைந்தால் கடலோரப் பகுதிகளில் அலைகளின் வேகம் அதிகரிக்கும். கடல் அரிப்பும் அதிகமாகும். பவளப் பாறைகள் அழிக்கப்படுவதால் புயல் பாதிப்புகளும் தீவிரமாகி விடும்” என்கிறார் அவர்.

“பவளப்பாறைகள் கடலுக்குள் இருக்கும் இயற்கையான நர்சரிகள் போல இருக்கின்றன. பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக அவை இருக்கின்றன.
கடலரிப்பைத் தடுப்பதில் பவளப் பாறைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கடலின் வெப்பநிலை உயர்வும் கடல் நீர்மட்ட உயர்வும் பவளப் பாறைகளை அழியும் நிலைக்குக் கொண்டு வந்து விடும். மன்னார் வளைகுடா பகுதிகள் ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு பவளப் பாறைகள் உள்ள 21 குட்டித் தீவுகள் இருக்கின்றன இவற்றில் மண்டம் பகுதியில் உள்ள பூவசரன் பட்டி என்ற சிறிய தீவும் , தூத்துக்குடிப் பகுதியில் விலாங்கிசல்லி என்ற
என்ற சிறிய தீவும் கடலில் மூழ்கியுள்ளன. இது ஒரு எச்சரிக்கை மணி” என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஜோன்ஸ் தாமஸ் ஸ்பாட்டாகஸ். மன்னார் வளைகுடா பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த பப்ளிக் அபையர்ஸ் சென்டர் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பிஏசி அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர் இவர். “பவளப் பாறைகள் அழிந்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, பவளப்பாறைகளைப் பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் பப்ளிக் அபையர்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ஜெங்கால் ஜெயராமன்.

“இந்தப் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை முறையில் கடல் பாசிகளை சேகரிக்கும் இந்தப் பணியில் மீனவப் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள். கடல் பாசிகள் (Sea Weed) கடல் உணவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடலில் கலக்கும் மாசுகளையும் ஈர்க்கக் கூடியவை. அத்துடன் கார்பன் டை ஆக்ஸ்டை ஈர்த்து கடலின் வெப்பநிலையையும் குறைக்கின்றன. மன்னார் வளைகுடா பகுதியில் 150 வகையான கடல் பாசிகள் உள்ளன. இவை மொத்தம் 8.7 லட்சம் டன் அளவுக்கு இருக்கின்றன. ஆண்டுக்கு 22 ஆயிரம் டன் அளவுக்கே இந்த பாசிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இப்போது இந்தப் பகுதியில் அண்மைக் காலங்களில் இந்தக் கடல் பகுதியில் அறிமுகபபடுத்தப்பட்ட பிலிப்பின்ஸை சேர்ந்த Ôகப்பாபைகஸ் ஆல்வரேசி’ (kappaphycus alverizii) என்ற அயல் நாட்டு கடல்பாசி ஊடுருவி வருகிறது. இந்தப் பாசிகள் பவளப் பாறைகளில் படிந்து அவற்றின் சுவாசத்தை தடுத்து நிறுத்தி அதற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்த Ôகப்பாபைகஸ் ஆல்வரேசி’ பாசிகளிடமிருந்து பவளப் பாறைகளைக் காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் பவளப் பாறைகளின் அழிவைத் தடுக்க முடியாது” என்கிறார் பேட்டர்சன்.

“மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமலை காரணமாக தண்ணீர் கடலில் சேருவதாலும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடலில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் பவளப் பாறைகளை பாதுகாக்க ஓரளவு உதவுகின்றன. கடல் நீர் வெப்பமடைதல் பவளப் பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தபோதிலும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் விரிவாக்கப் பணிகள், கடந்த காலங்களில் அதாவது 2005-க்கு முன்னதாக நடந்த பவளப்பாறைகளைத் தோண்டி எடுத்தல் போன்ற முறையற்ற செயல்பாடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கடலுக்குள் விடப்படுதல், அதனால் கடல் அமிலத் தன்மை அடைதல் போன்றவைகளும் பவளப்பாறைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன, இதனால், கடல் பவளப்பாறைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸ்டைடு வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பைத் தடுப்பது. பவளப் பாறைகளை முறைகேடாக வெட்டி எடுப்பதைத் தடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்றவற்றைத் தடுக்க வேண்டியது அவசியம்” என்று யோசனை கூறுகிறார் அவர்.
.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நல்ல பவளப் பாறைகள் இருந்தால், மீன் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் முதல் 6 லட்சம் டாலர் வருவாய் கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பான கூறியுள்ளது. கடல் மீன் வளத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பவளப் பாறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன், பவளப் பாறைகள் கடலோரப் பகுதிகளுக்கு இயற்கை தந்த பாதுகாப்பு அரண். எனவே, பவளப் பாறைகளைப் பாதுகாக்க இப்போதாவது முழு கவனம் செலுத்தி செயல்பட வேண்டிய நேரம் இது. It is better, late than never.

Puthiyathalaimurai (11-04-2013 )

Leave a Reply