Predicted sea level rise and impact along Tamil Nadu coast

Summary: The centre for Climate Change and Adaptation Research, Anna University, studied the impact of sea level rise in Tamil Nadu and suggested the Adaptation strategies. Some researchers from IFMR and IIT concentrate on the impacts of sea level rise on coastal infrastructure, ecosystem and land in the state of Tamil Nadu which has a long coastline. It highlights the financial implications of sea level rise on existing and proposed infrastructure along the Tamil Nadu coast and provides thereby an “early warning” of the implications of indiscriminate development close to the shoreline. Using Tamil Nadu as a case study, the analysis in this report provides preliminary estimates of the replacement value of major infrastructure, the present value of ecosystem services associated with damage to wetlands and the market value of land at risk from 1m of sea level rise by 2050.

கடல் நீர்மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?

பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.61 லட்சம் கோடி வரை சீரமைப்புப் பணிகளுக்காகச் செலவிட வேண்டியது வரும் என்கிறது ஆய்வுகள்.

———

இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக இருப்பது பருவநிலை மாறுதல். உலகம் வெப்பமயமாகி வருவதால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் உலகில் நில அரிப்பு உள்பட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். உலக அளவில் கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டரிலிருந்து 2 மில்லி மீட்டர் வரை உயர்ந்து வருகிறது என்று பருவநிலை மாற்றுத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவில் நமது பூமியின் சராசரி வெப்பநிலை 1990-ம் ஆண்டில் இருந்ததைவிட 1.4 டிகிரி செல்சியஸ் முதல் 5.8 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கலாம். அதேபோல கடல் நீர்மட்டம் 2100ம் ஆண்டில் 0.1 முதல் 0.9 மீட்டர் வரை உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரப் பகுதிகளில் 2050-ம் ஆண்டில் 15 முதல் 38 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்றும் 2100ம் ஆண்டு வாக்கில் 46 முதல் 59 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்று பருவநிலை மாற்றத்துக்கான நமது தேசிய செயல் திட்ட அறிக்கையில் (2008) குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்வதால் எந்த அளவுக்கு நிதி பாதிப்பு ஏற்படும் என்பதை சென்னையில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆய்வாளர்கள் சுஜாதா பைரவன், ராஜேஷ் ரெங்கராஜன், சென்னை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர் சுதிர் செல்லராஜன் ஆகியோர், கணக்கிட்டுள்ளனர். துறைமுகங்கள், மின்நிலையங்கள், கிழக்குக் கடற்கரைச்சாலை, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கடலோரப் பகுதிகளில் தனியார் மற்றும் பொதுத் துறை முதலீடுகள் போன்றவை குறித்தும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

“2050ம் ஆண்டில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்தால், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும். கடலோரத்தில் உள்ள மற்ற எட்டு மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தக் கடலோரப் பகுதிகளில் உள்ள 1091 சதுர கிலோ மீட்டர் நிலங்களில் கடல் நீர் புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்வினால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், மின்நிலையங்கள், முக்கிய சாலைகள் போன்றவற்றை சீரமைக்க ரூ.47,418 கோடியிலிருந்து ரூ53,554 கோடி வரை செலவாகும். இது, 2010ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் உள்ள கணக்கு இது. கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படுவதால் அதுதொடர்பான சேவை இழப்பு ரூ.3,583 கோடியிலிருந்து ரூ.14,608 கோடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிலப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால் ஏற்படும் இழப்புதான் மிக அதிகமாக இருக்கும். அதாவது, ரூ. 3,17,661 கோடியிலிருந்து 61,15,471 கோடி வரை நிலங்களில் ஏற்படும் பாதிப்பு இருக்கும்” என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

“தமிழ்நாட்டில் கடல் நீர் மட்டம் உயரும் போது, நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது பருவநிலை மாற்றத்தினால் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்தும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் தேவை. கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்பது போன்ற பரிந்துரைகளை இந்த ஆய்வாளர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

.கடல் நீர் மட்டம் அதிகரித்தால் பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தமிழக கடலோரப் பகுதிகளில் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மையம் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள், கடல்நீர் மட்ட அதிகரிப்பை எதிர்கொள்ள நாம் எத்தகைய முன் எச்சரிக்கையுடன் இப்போதிருந்தே செயல்செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

“தமிழகத்தில் 1969ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு அதிகபட்ச வெப்ப நிலை 0.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 0.39 டிகிரி செல்சியஸ். அளவுக்கும் ச்ராசரி வெப்பநிலை 0.45 டிகிரி அளவுக்கும் அதிகரித்துள்ளது. இவை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்துபவை. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 0.5 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடல் நீரால் 66,685 ஹெக்டேர் அளவுக்கு நிலம் பாதிக்கப்படும். ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் 1,05,642 ஹெக்டேர் அளவு நிலங்கள் கடல்நீரால் பாதிக்கப்படும். கடல் நீர் மட்ட உயர்வினால் தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுவதால் கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அத்துடன், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஆளாகும். சில இடங்களில் கடல் நீர் புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறலாம். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அலையாத்திக் காடுகளிலும் பவளப் பாறைகளிலும் கடல் வள உற்பத்தியிலும் காண முடியும்” என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஏ. ராமச்சந்திரன், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் எத்தகைய யுக்திகளைக் கடைபிடிக்க வேண்டும். தற்போதுள்ள திட்டங்களில் எத்தகைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்த அறிக்கையில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்..

மக்கள் தொகை அடர்த்தி, நகர்மயமாதல், தொழில் வளர்ச்சி, கடலோர சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள், புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணங்களால் கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.கடல் நீர் மட்டம் ஒரே ஆண்டில் அரை மீட்டரோ அல்லது ஒரு மீட்டரோ உயர்ந்து விடப் போவதில்லை. ஆனால், ஒரு சில மில்லி மீட்டர் உயர்வது கூட, எதிர்காலத்தில் சிறு துளி பெருவெள்ளமாகிவிடலாம். எனவே, கடல் நீர் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் எதிர்கால சந்ததியினருக்காவது இதில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Puthiyathalaimurai (02-05-2013)