Will nuclear energy help combat climate change?
காலநிலை மாற்றம் (Climate change) என்பது இன்று பல ஊடகங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் காலநிலை அளவீடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையே காலநிலை மாற்றம் என்கிறார்கள். இன்று சுற்றுச்சூழலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு இந்த காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம்.
நதிகள் வற்றிப்போவதற்கும், மழை பொய்த்துப் போவதற்கும் எதிர்பாராத சமயங்களில் மழை பெய்வதற்கும் காலநிலை மாற்றம் முக்கியமான காரணம் என்று அறியப்பட்டிருக்கிறது.
கடந்த நூற்றாண்டில்தான் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் காலநிலை மாற்றம் சர்வதேச சமூகம் சந்திக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சிக்குக்கூட சவாலாக அமையும் என்று சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு சொல்கிறது.
இந்தக் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?
இன்றைக்கு காலநிலை மாற்றம் உருவாக இயற்கைக் காரணங்கள் தவிர, மனித செயல்பாடுகளே பெருமளவில் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக மனித செயல்பாடுகளால் பூமி வேகமாக வெப்பமடைவதும் முக்கியமான காரணம்.
பூமியின் மேற்பரப்பில் ஒரு படலம் போல இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வாயுக்கள் கிரகிக்கித்துக்கொள்ளும் சூரிய வெப்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க மனித செயல்பாடுகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புதைப்படிம எரிப்பொருட்களை எரிப்பது, அவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பது, உரங்களைப் பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல மனித செயல்பாடுகளால் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து, புவி வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
தீர்வு நோக்கி…
இப்போது சர்வதேச சமூகத்தின் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால், புவி வெப்பமடைதல்தான். இந்தச் சவாலை எதிர்கொள்ள ஐ.நாவின் இரு உறுப்பு அமைப்புகள் இணைந்து காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental panel on climate change – IPCC) ஒன்றை அமைத்தன. 1988ல் அமைக்கப்பட்ட இந்த குழுவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், அறிவியலாளர்கள் இடம்பெற்றார்கள்.
இதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலும், பின்னர் 2013 முதல் 2020 வரை இரண்டு கட்டங்களாக வளர்ந்த நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு எதுவும் இல்லையென்றாலும், அவையும் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் வளர்ந்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஒன்று தூய்மை வளர்ச்சி முறை (clean development mechanism). இந்தச் சலுகையின் கீழ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
சூரிய சக்தி, காற்று சக்தி போன்றவை அடிப்படையிலான மின்திட்டங்கள் தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வரும். ஆரம்பம் முதலே அணுசக்தி தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வராது. ஆனால், இப்போது அணுசக்தியையும் அதில் இணைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோரிக்கை வைக்கத் துவங்கியிருக்கின்றனர். பிற மாற்றுசக்திகளைவிட அணுசக்தி சூழலுக்கு இசைவானது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். இந்த வாதத்தை வேறொரு சாரார் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.
உயிருக்கு உலை வைக்கக்கூடியது என்று கருதப்படும் அணுசக்தி எப்படி சூழலுக்கு இசைவான ஒன்றாக இருக்க முடியும்? அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? இதற்கு எதிர் தரப்பினர் என்ன பதில் சொல்கிறார்கள்? பார்ப்போம்.
(தொடரும்)