Summary: In the Gulf of Mannar region, extending upto kanyakumari, the coastal population enjoy False Trevally (Lactarius lactarius) fish as delicacy .Locally, they call them as kudhipu, Sudumbu or kadumbu. In this region, gradual decrease in rainfall and rise in temperature over the years has played a key role in the decrease of this fish catch which reduced the income of the small scale fishermen, according to a study conducted by Suganthi Devadason Marine Research Institute, Tuticorin. Fishermen were able to catch these fishes within 5 miles from the shore during 1980’s but today, they are able to obtain only few kilograms of the fish even after traveling up to 40 to 50 nautical miles. As for the country crafts, there has been no catches. The fishermen of the Tuticorin coast are still discussing the possible reasons for the depletion of the fish stock.
Puthiyathalaimurai (23-05-2013 )
உயரும் வெப்பநிலை! குறையும் குதிப்பு மீன்!
தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு நல்ல வருவாய் அளித்து வந்த குதிப்பு மீன் தற்போது அரிதாகிவிட்டது. குதிப்பு மீன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வந்த இந்தப் பகுதி மீனவர்கள், இந்த மீன் வரத்து குறைந்ததற்குக் காரணம் தெரியாமல் திகைக்கின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடலின் வெப்பநிலை உயர்வு, இந்த மீன்களை இடம் பெயரச் செய்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
—
“குதிப்பு மீன்னா நல்ல ருசி. இதுக்காகவே இதுக்கு நல்ல விலை கிடைக்கும். ஒரு காலத்தில இங்க மீன் பிடிக்க போனோம்னா ஏராளமான குதிப்பு மீன் கிடைக்கும். இப்ப அதைப் பார்ப்பதே அரிதாகி விட்டது” என்கிறார் தூத்துக்குடி தெற்கு கடற்கரையை சேர்ந்த 87 வயதான மீனவர் பெர்னார்ட். தூத்துக்குடி பகுதியிலே இந்த மீனை குதிப்பு என்கிறார்கள். ராமேஸ்வரம் பகுதியில் இந்த மீனை சுதும்பு என்கிறார்கள். இந்த மீனுக்குக் கடும்பு என்றும் பெயர். ஆங்கிலத்தில் ஃபால்ஸ் டிரவெலி (False Trevally) இதன் அறிவியல் பெயர் Lactarius lactarius. பெயர்தான் வேறு என்றாலும் கூட, இதன் ருசியே தனி. இந்த ருசிக்காகத்தான் மற்ற மீன்களை விட விலையும் அதிகம். அதிக அளவில் ஏற்றுமதியும் ஆகும் வகை மீனும்கூட. அதனால்தான், நல்ல விலை போகக்கூடிய இந்த மீன்களைப் பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் காட்டினார்கள். கடலில் 10 மீட்டர் ஆழத்தில் சேறு சகதி உள்ள இடங்களில்தான் இந்த மீன் கிடைக்கும். ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இந்த மீன் கிடைக்கும். 30 செமீ அளவுள்ள இந்த மீன் வேகமாக நீந்திச் செல்லக்கூடியது. இவை, காலை 7 மணியிலிருந்து பத்து மணி வரையிலும் இரவு 6 மணியிலிருந்து 8 மணியிலும் வலையில் சிக்கும்.
“ஒரு காலத்தில் டன் கணக்கில் கடற்கரைக்கு வந்து கொண்டிருந்த குதிப்பு மீன், தற்போது 10 கிலோ, 15 கிலோ அளவுக்குத்தான் கிடைக்கிறது” என்கிறார் 25 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வம். “இப்ப பாறை, களவாய் சிங்க இறால் போன்ற மீன்கள் வரத்துகூட குறைந்து வருகிறது” என்கிறார் அவர். சீசன் நேரத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 டன் வரையும் தூத்துக்குடியில் ஒரு நாளைக்கு 10 டன் வரையும் இந்த மீன் கிடைத்து வந்தது. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இந்த மீனுக்கு கிராக்கி அதிகம். எனவே, இந்த மீன் ஏற்றுமதி மூலம் நல்ல பணம் பார்த்த மீனவர்கள் பலர். இப்போது இந்த மீன் வரத்து குறைந்து விட்டதால், விலை குறைந்த மற்ற மீன்களை நம்பி இருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்கிறார்கள் அந்தப் பகுதி மீனவர்கள்.
“ஒரு காலத்தில் நாட்டுப் படகுகளில் போகிறவர்களுக்கு நிறைய குதிப்பு மீன் கிடைத்து வந்தது. அப்புறம், நாட்டுப் படகுகளில் செல்பவர்களுக்கு குதிப்பு மீன் கிடைக்காத நிலை ஏற்பட்டது. அந்த காலத்தில், விசைப் படகுகளுக்கு அதிகமாகக் கிடைத்து வந்த குதிப்பு மீன், தற்போது அவர்களுக்கும் எப்போதாவதுதான் கிடைக்கிறது. அதற்கும் அவர்கள் கடலில் நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது” என்கிறார் ரேஷ்புரம் நாட்டுப் படகு பொது பஞ்சாயத்துத் தலைவர் ஆர்.ராஜ். குதிப்பு மட்டுமல்ல, ஐயலை, வாழை, சாலை போன்ற மீன்களின் வரத்தும் குறைந்து விட்டது. ஓரு காலத்தில், இந்த மீன்களின் வாழ்விடங்களாகத் திகழ்ந்த பவளப் பாறைகளை எடுத்து வீடு கட்டப் பயன்படுத்தினார்கள். இதற்கு சட்டரீதியான தடை விதிக்கப்பட்டுள்ளதால், இதெல்லாம் தற்போது இல்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த மீன்கள் கிடைக்கும். கடலில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் காலமான ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து மே 30-ம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்ற நடைமுறை அமலில் உள்ளது. இருந்தாலும், காலப்போக்கில் இந்த குதிப்பு மீன் வரத்து மிகவும் குறைந்து விட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடியையொட்டிய தெற்கு கடலோரப் பகுதிகளில் குதிப்பு மீன் வரத்துக் குறைந்து வருவதற்கான காரணங்களை தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். “தமிழ்நாடு கடற்கரையோரத்தில் 1973ம் ஆண்டில் 1822 டன் கிடைத்தது, 1993-ல் இந்த எண்ணிக்கை 175 டன் ஆகக் குறைந்து விட்டது. குதிப்பு மீன் கிடைப்பதே அரிதாகிப் போய் விட்டதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்த மீன் வரத்து எவ்வளவு என்பதற்கான புள்ளி விவரங்கள் தெரியவில்லை. 1980ம் ஆண்டுகளில் 5 மைல் தூரத்திற்குள் இந்த மீன் கிடைத்தது. தற்போது, 40 அல்லது 45 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குச் சென்றால் கூட சில கிலோ மீன்கள்தான் கிடைக்கின்றன. முன்பெல்லாமல் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான சீசன் நேரத்தில் ஒரு படகில் மட்டுமே அரை டன்னிலிருந்து ஒன்றரை டன் வரை குதிப்பு மீன் கிடைக்கும். ஆனால் 300க்கு மேற்பட்ட விசைப் படகுகள் உள்ள தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஓட்டு மொத்த சீன் முழுவதும் 150 கிலோ அளவுக்குத்தான் மீன் கிடைக்கிறது. நாட்டுப் படகுகளுக்கு இந்த மீன் கிடைப்பதே இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம்” என்கிறார் ககந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் இயக்குநர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட்.
“தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதாலும் குஞ்சு பருவத்திலேயே மீன் பிடிக்கப்படுவதாலும் இந்த மீன் இனம் குறைந்து வருகிறது. அத்துடன், மீன்களின் வாழ்விடமான பவளப் பாறைகளும் கடற் புற்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இந்தக் கடல் பகுதியில் இருந்த குதிப்பு மீன்கள் ஆழமான வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன. இந்த மீன் வரத்துக்கு குறைவுக்கு மனிதர்கள் மட்டுமல்ல பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம். கடல் பகுதி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மழை நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. தூத்துக்குடிக் கடல் பகுதியில் முறையான மழை இல்லை. புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் தாமிரவருணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருகிறது. இப்பகுதியில் உள்ள மற்றொரு ஆறான வைப்பாறு வரண்டு விட்டது. சிறிய நதிகளான கள்ளாறு, வேம்பாறு ஆகியவற்றிலும் தண்ணீர் இல்லை. இந்தப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. அத்துடன், இந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணைகளும் கடலுக்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைத்து விடுகிறது. கடலில் கலக்கும் ஆற்று நீரில் உள்ள ஊட்டச்சத்துகள் மீன்களுக்கு உணவாக இருக்கும். தண்ணீர் வரத்து குறைவினால் கடலில் உள்ள மீன்களுக்கான ஊட்டச்சத்து போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனாலும் மீன்கள் இடம் பெயரும் நிலை உருவாகிறது. அக்டோபர், நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழை காலம். இந்த அக்டோபரில் நல்ல மழை கிடையாது. மழை அளவு குறைந்து வருகிறது. அத்துடன், கடலின் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால், குறிப்பிட்ட வெப்ப நிலையில் கடல் நீரில் வாழக்கூடிய குதிப்பு மீன் இடம் பெயரத் தொடங்கியுள்ளது. இதுபோல, கடல்நீரில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக வேறு வகையான மீன்களும் இடம் பெறக்கூடும் சாத்தியங்கள் உள்ளன” என்கிறார் பேட்டர்சன்.
பருவநிலை மாற்றம் என்பது கண்ணுக்குத் தெரியாமல் புள்ளி விவரங்களில் புதைந்து கிடப்பதாகக் கருத வேண்டாம். அதன் விளைவுகள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கி விட்டன. அதற்கு ஒர் எடுத்துக் காட்டுதான் குதிப்பு மீன். “கடந்த 40 ஆண்டுகளில் இந்தியக் கடல் நீரில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன என்று கூறியுள்ளார்” இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகர்வால். அது குதிப்பு மீன் விஷயத்திலும் உண்மையாகி வருகிறது. காலப்போக்கில் மற்ற வகை மீன்களுக்கும் தொடரலாம். எனவே, தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் நிலைமை தொடர வேண்டாம்!