குறையும் தேன் உற்பத்தி…கசக்கும் உண்மைகள்…
மழை பெய்வதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நீலகிரி மலைப் பகுதியில் கிடைக்கும் தேன் அளவு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, அந்தப் பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் தேனீக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.
——
பேச்சி. ஐந்து தலைமுறைக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மலைப் பகுதியைச் சேர்ந்த தேன் எடுக்கும் பெண். மலையின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து கயிறு கட்டித் இறங்கி அங்கு பாறைகளுக்கு இடையே அடையாக இருக்கும் தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்து வந்து விடுவாள். மலைப் பகுதியில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருந்த தேன் அடையிலிருந்து தேன் எடுக்க முடியுமா? என்று கேட்டனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஆண்கள். அங்கிருந்தவர்களுடன் சவால் விட்டு, அந்த மலை உச்சியில் பாறையில் இருந்த தேன் கூட்டிலிருநது தேனை எடுத்து வந்தாள் பேச்சி. இதனால், பொறாமை கொண்ட அவர்கள், மலையில் தேன் எடுக்க பேச்சி கயிற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கும் போது, கயிற்றை அறுத்து விட்டனர். அதனால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்து போனாள். அந்த இடம் பேச்சியின் நினைவாக, பேச்சிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்திற்கு தேன் எடுக்க வரும் ஆண்களை பேச்சியின் ஆவி மிரட்டுவதாக ஐதீகம். அதனால், அங்கு தேன் எடுக்க வருபவர்கள் பேச்சியை, தெய்வமாக வழிப்பட்டு விட்டு தேன் எடுக்கச் செல்லத் தொடங்கினர். இது நாட்டுப்புறக் கதை. ஆனாலும், அந்தக் காலத்தில் மலையேறி தேன் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பைக் காட்டுவதாக உள்ளது. ஆனால், தற்போது ஆண்களே மலைப் பகுதிகளுக்குச் சென்று தேன் எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்குக் கிடைத்து வரும் தேனின் அளவு குறைந்து வருகிறது. இதற்கு, அந்தக் கால பேச்சியின் சாபம் காரணமல்ல. மழை பெய்வதிலும் வெப்பநிலையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அங்கு கிடைக்கும் தேன் அளவு குறைந்து வருகிறது என்கிறது அறிவியல் ஆய்வுகள்.
நீலகிரி, சத்தியமங்கலம், ஆனைமலை, பழனி, வருஷநாடு, ஆனைமலை, சதுரகிரிமலை, பச்சைமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை…இப்படி பல்வேறு மலைப்பகுதிகளில் தேன் எடுக்கும் பணிகளில் ஆதிவாசிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி பகுதியில் குரும்பர், இருளர், கசவர், சோளிகர், ஜெனு குரும்பர், காட்டு நாயககர், பதினா நாயக்கர், சோள நாயக்கர், தொதுவர், மனசர், காடர் போன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் 18 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஆயிரத்து ஐந்நூறு பேர் வரை இந்த தேன் எடுக்கும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தேன் எடுக்க ஆதிவாசிகள் நான்கு ஐந்து பேராகச் செல்வார்கள். அதில் தேன் எடுக்கச் செல்பவருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.22 ஆயிரம் அளவுக்கு வருமானம் கிடைக்கும். அவருடன் உதவிக்காக செல்வபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இந்தத் தேன் எடுக்கக் காட்டுப் பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்களில் குறைந்தது 45 நாட்களாவது இதற்காக செலவிட வேண்டியதிருக்கும். தேன் எடுக்கச் செல்லும் போது தேன் எவ்வளவு கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு செல்ல முடியாது. தேன் எடுத்த பிறகுதான் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பது தெரியவரும். தேன் கிடைப்பதில் வருமானம் குறைந்தால் தேன் எடுப்பவர்களின் வாழ்நிலை பாதிக்கப்படும். ஆண்டு முழுவதும் இந்த வேலை இல்லை என்பதால், மற்ற காலங்களில் விவசாயக் கூலி வேலை போன்ற வேறு வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். ஜனவரியிலிருந்து மே மாதம் வரை நிலத்திலிருந்து வருவாய் கிடைக்காத காலம். இந்தக் காலங்களில் தேன் சேகரிப்பு அவர்களுக்கு முக்கிய வருவாயாக உள்ளது.
“நீலகிரியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தேன் உற்பத்தி அளவு குறைந்து வருகிறது. நீலகிரி பகுதியில் வழக்கமாக ஆண்டுக்கு எட்டு டன் அளவுக்கு தேன் கிடைக்கும் ஆனால், கடந்த ஆண்டு மூன்றரை டன் அளவுக்குத்தான் தேன் கிடைத்தது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு நிலைமைதானா என்பதைப் பொருந்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார் நீலகிரியில் உள்ள கீ ஸ்டோன் ஃபவுண்டேஷன் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளரான ராபர்ட் லியோ. இந்தப் பகுதியில் உள்ள தேன் எடுக்கும் ஆதிவாசிகளுடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பைச் சேர்ந்த அவர், `இந்தப் பகுதியில் தேன் உற்பத்தி குறைந்து வருவதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம்’ என்கிறார்.
“நமது நாட்டில், மலைத் தேனீ, அடுக்குத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுந்தேனீ ஆகிய நான்கு வகைத் தேனீக்கள் உள்ளன. இதில் அடுக்குத் தேனீயும் கொசுந்தேனீயும் மரப்பொந்துகள், சுவர்கள், கிணற்றின் ஓரங்கள், கூரைகள் போன்ற இருட்டான பகுதிகளில் குடியிருக்கும். மலைத்தேனீக்களும் கொம்புத்தேனீக்களும் சீசனுக்கு சீசன் இடம் மாறக்கூடியவை. மலைத்தேனீக்கள் உயரமான பகுதிகளில் பாறைகளுக்கு இடையே ஒரே அடையாகக் கட்டும். ஒரு கூட்டிலில் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். அதன் ஒரு கூட்டிலேயே 4 முதல் 20 கிலோ வரை தேன் கிடைக்கும்.
பிப்ரவரி கடைசியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் காடுகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அந்தக் காலத்தில் மார்ச் முதல் வாரத்திலிருந்து மலைத்தேனீக்கள் கூடு கட்டி குடியிருக்கத் தொடங்கும். ஏப்ரல் கடைசியிலிருந்து ஜூன்-ஜூலை மாதங்கள் வரை தேன் எடுக்கலாம். பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்களில் நவம்பர் மாதத்தில் தேன் கிடைக்கும். போன வருஷம் நீலகிரி பகுதியில் குன்னூர், குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை இல்லை. இதனால் அங்குள்ள காட்டுப் பகுதிகளில் பூக்கள் மலருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தேனீக்களுக்கு உணவான மகரந்தத் தூளும் மகரமும் போதிய அளவு கிடைக்கவில்லை. அதனால், தேனீக்கள் வேறு இடங்களுக்குப் போய்விட்டன. அதனால் தேன் கிடைப்பது கணிசமாகக் குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு அடைக்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை கிடைக்கும் மலைத்தேன் இரண்டு மூன்று கிலோவாகக் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளரக்கப்படும் தேனும் பத்துக் கிலோவிலிருந்து ஓன்றரைக் கிலோவாகக் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளர்க்கப்படும் தேனீக்களில் தேன் எடுக்கும் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை. இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதத்தில் தேன் கிடைக்கும். ஆனால் கடந்த நவம்பரில் பெட்டிகளில் தேன் இல்லை. ஆனால் ஜனவரியில் தேன் இருந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. மழை முறை தவறிப் பெய்வதாலும் மழை அளவு குறைவதாலும் இந்த நிலைமை” என்கிறார் அவர்.
“மழை பெய்வதில் தாமதமானால், விதை விதைப்பு தாமதமாகிறது. பயிர் சாகுபடி நேரங்களில் கனமழையோ அல்லது தொடர் மழையோ இருந்தாலும் பயிர் பாதிக்கப்படும். பூ பூக்கும் காலத்தில் மழை பெய்தால் பூக்களில் உள்ள மகரம் நீர்த்துப் போகலாம். அது தேனீக்களுக்கு உவப்பாக இருக்காது. மலைத் தேனீக்களும் கொம்புத் தேனீக்களும் குறிப்பிட்ட காலத்தில் மலைப் பகுதிகளில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்தாலும் தேனீக்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். தனது உணவுக்காக பூக்களிலிருந்து மகரந்தத் தூளையும் மதுரத்தையும் தேனீக்கள் சேர்த்து வைக்கும். வெப்பம் அதிகம் இருந்தால் மண்ணில் ஈரத்தன்மை குறைந்து, செடி, கொடிகள் வாடிவிடும். அதிகப்படியான வெப்பம் இருந்தால் பூவிலிருக்கும் மதுரம் ஆவியாகிவிடும். இதனால் பூக்களிலிருந்து தேனீக்களுக்குத் தேவையான அளவு மதுரம் கிடைக்காது. 500 மீட்டர் தொலைவுக்குள் தண்ணீர் இருக்கும் பகுதிகளில்தான் மலைத்தேனீகளின் அடைகளைப் பார்க்க முடியும். மழை இல்லாமல் போகும் நிலையில் தண்ணீர் இல்லாமல் வெப்பநிலையும் அதிகமாக இருந்தால் இந்தத் தேனீக்கள் சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடும்” என்கிறார் அவர் மேலும்.
“மழை மாறி பெய்வதால் பூக்கள் பூக்கும் காலம் மாறும். இதற்கிடையே, இங்குள்ள தேனீக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன. வெப்பம் அதிகம் இருந்தாலும் தேனீக்கள் வேறு இடத்துக்குப் போய் விடும். அதனால் தேன் உற்பத்தி குறைந்து விடுகிறது” என்கிறார் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள தடசலட்டி கிராமத்தைச சேர்ந்த தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ரங்கசாமி. “மழை சரியில்லாததால்தான் தேன் உற்பத்தி குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒரு கூட்டில் கிடைத்த தேனில் பாதியளவு கூட இப்போது கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம்” என்கிறார் அதேபகுதியில் நான்கு தலைமுறைகளாக தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பழங்குடினர் குடும்பத்தைச் சேர்ந்த மாரி (வயது72).
“ஜவ்வாது மலைப் பகுதிகளில் கிடைக்கும் தேனின் அளவும் பாதிக்கு மேல் குறைந்து விட்டது. பெட்டிகளில் வளர்க்கப்படும் அடுக்குத் தேனீக்களிடமிருந்தும் கிடைக்கும் தேனின் அளவும் குறைந்து விட்டது. அதற்கான காரணம் புரியவில்லை” என்கிறார் அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்ப்புப் பணியில் நீண்ட காலமாக இருக்கும் லோகநாதன். இந்தப் பகுதியில் சந்தன மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டுள்ளதால் அங்கு தேனின் அளவு குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர்.
“முன்பு, விவசாயிகள் தங்களது நிலத்தில பல வகையான பயிர்களைப் பயிர் செய்வார்கள். தற்போது, தங்களுக்குரிய நிலங்களில் ஓரின பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். இதனால், மகரந்தம் குறைந்து தேன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுதல், நிலப் பயன்பாடு மாற்றம், விவசாயத்துக்குப் பூச்சிக் கொல்லிகளைப பயன்படுத்துதல் போன்ற காரணங்கள்கூட தேனை உற்பத்தி செய்யும் தேனீக்கள் கூட்டங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும்கூட, பருவநிலை மாற்றம முக்கியக் காரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மழை தவறிப் பெய்யும் போது தேனீக்கள் இடம் பெயர்கின்றன. அதேபோல, வெப்பநிலை அதிகரிக்கும்போதும், இடம் பெயர்கின்றன என்பதை இந்தப் பகுதியில் தேன் எடுப்பவர்கள் கண்களால் பார்த்து உணர்ந்திருக்கிறார்கள். தேன் உற்பத்தியில் ஈடுபடும் தேனீக்களுககு மகரந்த சேர்க்கையில் 69 சதவீதப் பங்கு இருக்கிறது. தாவர இனப் பெருக்கத்துக்கான அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவியாக இருக்கின்றன. தேனீக்களின் வரத்து குறையும் போது தாவர இன உற்பத்தியும் பாதிக்கப்படும்” என்று கூறுகிறார் லியோ ராபர்ட்.
“தேனீக்கள் உலகிலிருந்து மறைந்து விட்டால், அதன் பிறகு மனிதர்களுக்கு மிச்சமிருப்பது நான்கு ஆண்டு வாழ்க்கைதான்” என்றார் ஐன்ஸ்டீன். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பல்வேறு நிலைகளில் நேரடியாக தெரிய ஆரம்பித்து விடடது. அதற்கு மற்றொரு உதாரணம் தேன். இது கசக்கும் உண்மை.
Puthiyathalaimurai (25-04-2013)